மெய் தீண்டல்
- Deva
- Jul 13, 2023
- 2 min read
மக்கள் மெய்தீண்டல் உடலுக்கு மட்டுமா இன்பம்!
நிகழ்ச்சி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட செயலுக்காக சிலரை அழைக்கிறேன். பங்கேற்பாளர்களுக்கு அது எதிர்பாராததொரு அழைப்பு. இப்படியான அழைப்புகளில் சட்டென யாரும் முன்வர மாட்டார்கள்.
ஆனால் மூன்று பேர் முன்வந்து, அதனைத் திறம்படச் செய்கிறார்கள். அவர்களைப் பாராட்டி, சிலாகித்துப் பேசுகிறேன். அரங்கில் கைதட்டல் எழுகிறது. மூன்று பேரையும் பார்த்து பாராட்டு போதுமா? எனக் கேட்கிறேன். வெட்கம் பூத்தபடியே போதுமென ஆமோதிக்கிறார்கள்.
அமர்ந்திருப்போரை நோக்கிப் புன்னகைத்தபடி, இந்தப் பாராட்டு போதாதுபோல் தோன்றுகிறதென்கிறேன். அரங்கு மீண்டும் கை தட்டலில் அதிர்கிறது. “வெறும் கை தட்டல்தான் பாராட்டா!?” எனக் கேட்கிறேன். சிலர் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள். சிலர் ‘ஓ..!’ போடுகிறார்கள். சிலர் விசில் அடிக்கிறார்கள்.
முன் வரிசையில் இருந்த ஒருவர் சரசரவென மேடைக்கு வந்து, கைகளை விரித்தபடி ஒவ்வொருவரையும் பாராட்டும் விதமாக அணைத்துக் கொள்கிறார். அரங்கு இப்போது மிகப் பெரிய கைதட்டலோடு அந்த அணைப்பினை அங்கீகரிக்கின்றது.
கை தட்டல்கள் ஓய்ந்த தருணத்தில் மூவரும், பாராட்டு பெற்ற விதம் குறித்து பேசுகின்றனர். மூன்றாவது நபர் பேசும்போதே மெல்ல நெகிழ்கிறார். கண்களில் நீர் கசிகின்றது. “வாழ்க்கைல இதுவரைக்கும் யாருமே கட்டிப் புடிச்சதில்ல!” என உணர்வுகளில் ஆட்பட்டு நெகிழ்ந்து கண்களைத் துடைக்கிறார். அந்த நெகிழ்வும் தளர்வும் அழகியதொரு காட்சி.
தான் அணைத்ததால் ஒருவர் நெகிழ்வதைக் கண்ட, அந்த முன்வரிசை மனிதர், மீண்டும் ஓடி வந்து கை பற்றிக் குலுக்கி, இன்னொருமுறை அவரை ஆரத்தழுவிக் கொள்கிறார்.
*
மாவட்டம் முழுவதிலிருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிலரங்கு அது. பல்வேறு தரப்பு ஆசிரியர்கள் குழுமியிருந்தனர். பயிலரங்கின் நிறைவுக் கணம் வருகிறது.
ஒருங்கிணைப்பாளர் நிகழ்ச்சி குறித்து பங்கேற்பாளர்களின் கருத்துகளைப் பகிர அழைக்கிறார். சில ஆசிரியர்கள் மேடைக்கு வருகிறார்கள். ஓரிரு சொற்களிலும், ஓரிரு நிமிடங்களிலும் தம் கருத்தை முன்வைக்கின்றனர். ஓர் ஆசிரியர் மட்டும் “என்னோட நன்றியை சார்கிட்டியே நேரடியா தெரிவிச்சுக்குறேன்” என்றபடி என்னருகில் வருகிறார்.
என்ன செய்யப்போகிறார் என யோசனையோடு நான் நின்றிருக்க, என் எதிரில் கைகளை அகல விரித்து அணைப்பிற்கான அழைப்பாக நிற்கிறார்.
புன்னகையோடு “நா உங்கள கட்டிக்கணும் சார்!” என வேண்டுகிறார். பெரும் மகிழ்வாய் உணர்கிறேன். எனக்கும் புன்னகை தொற்றிக் கொள்கிறது. அணைப்பிற்குள் ஆட்படுகிறேன். வாஞ்சையாக, நன்றியாக, பாராட்டாக அவர் நெகிழ்வாக அணைத்துக் கொள்கிறார்.
”மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”
இந்தத் திருக்குறள் வாசித்ததில் இருந்து 'மெய் தீண்டல்’ மனதிற்குள் இடைவிடாது அலையடித்து வேட்கையோடு விளையாடு தொகுப்பில் உள்ள 'அணைப்பு எனும் ஆகச் சிறந்த மனம் கடத்தி’ கட்டுரையைத்தான் மீட்டெடுத்து வந்தது. கட்டுரையில் இருந்த சம்பவங்கள்தான் மேலே பகிரப்பட்ட இரண்டும் .
அணைப்பு எனும் மெய் தீண்டலில் மிகப் பெரியதொரு மாயம் இருக்கின்றது. ஆற்றுப்படுத்துதலில் பெரும் பங்கு வகிக்கின்றது. மனப் பதட்டம், அழுத்தத்தைச் சமாளிக்க, கணிசமான அளவில் தணிக்க மெய்தீண்டல் பேருதவி செய்யும்.
வசூல் ராஜா படத்தில் வரும் 'கட்டிப்புடி வைத்தியம்’ மிக முக்கியமானதொரு தெரபியாக நமக்குப் பழகியிருக்க வேண்டும். ஏனோ அந்த அற்புதம் நிகழாமலே இருக்கின்றது.
பொதுவாகவே மெய் தீண்டல் மகிழ்ச்சி தருமென்றால், தன் கனவாய் பெற்றெடுத்த குழந்தையெனும் 'பேரழகும் பேரன்பும்' தன்னைத் தழுவும்போது எவரொருவரும் புத்துயிர்க்கவே செய்வர். மழலைச் சொற்களில் மனச் செவியும் நிரம்பி இன்புறும்.
அதே நேரம் ஒரு குழந்தையின் மெய் தீண்டல் இன்னொரு நிலை வாய்த்தவருக்கு வேறொரு மனநிலையையும் உணர்த்தலாம். (2014ல் எழுதிய கவிதை)
~~
சொல்லொன்று
உயிர் தைக்கையில்
அந்தப் பார்வை
விழி தீண்டுகையில்
மூச்சுக் காற்று
நா உலர்த்துகையில்
நாண இறகு
மெல்ல உதிர்கையில்
விரற் தீண்டல்
குளிராய்ச் சூடேற்றுகையில்
உணர்வின் கதவு
தாழிடப்படுகையில்
நம்பிக்கையின்
மூடி திறக்கப்படுகையில்
ஒரு காதல்தான்
பகிரப்பட்டிருக்க
வேண்டுமென்பதில்லை
மழலையொன்று குளறியபடி
பிள்ளைப் பேறற்றவள்
தனம் பற்றியும் இருக்கலாம்!
~~
மக்கள்மெய் தீண்டல் உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கும் இன்பம்!
Opmerkingen