top of page

பல் வலியா.? பல் வலியா ?

  • Writer: Deva
    Deva
  • Jun 24, 2020
  • 3 min read


நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் காரணம் என்ன?


குறித்த கால கட்டத்தில் தானாக முளைத்து தானாக விழும்படி படைப்பின் சூட்சுமம் அமைந்திருந்ததெல்லாம் ஒருகாலம். காலத்தின் வேகமும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் தீவிரமும், மருத்துவத்தின் மேம்பாடும் பெருகிவிட்ட இக்காலத்தில் கடைவாய்ப் பல்லுக்கொரு சிறப்பு மருத்துவர், முன் பல்லுக்கொரு சிறப்பு மருத்துவர் என்றும் வந்துவிட சாத்தியங்கள் தெரிகிறது.


இருந்தும் பற்களைக் கிருமிகள் தாக்குவதாயிருக்கட்டும், ஈறுகள் வீங்கி ‘விண் விண்' என்று வலி கொடுப்பதாயிருக்கட்டும், இவையெல்லாம் இரவிலும் குளிர்காலத்திலுமே அதிகமாக துன்புறுத்துவதாய் இருக்கட்டும்... மாறவேயில்லை.


முளைக்காத பல்லை முளைக்கச் செய்யவும், ஏறுமாறாய் முளைத்தவற்றை சீராக்கவும், பெரிதை சிறிதாக்கவும், பற்களுக்கிடையே இடைவெளி அதிகமென்றால் சரிசெய்யவும் தேர்ந்த வல்லுநர்களை அணுக சாவகாசமாய் நமக்கும் நேரம் ஒத்துவரும் போது பார்த்துக் கொள்ளலாம்.


ஆனால், திடுதிப்பென வந்து படுக்கையில் தலைசாய்க்க விடாமல் நரம்பு மண்டலம் முழுக்க வலி தெறிக்க, தடுமாறும் போது கைகொடுக்கத் தான் எத்தனையெத்தனை கைவைத்தியங்கள்!


சேகரித்தவற்றைப் பகிர்கிறேன்...


பல்வலியென்பது பல் சம்பந்தமான பிரச்சனை மட்டுமல்ல. பல்லின் புறப்பகுதியில் வரும் அழற்சி மற்றும் தொற்று, பக்கவாதம், மாரடைப்பு முதல் ஆண்மைக் குறைவு வரை ஏற்படுத்தும் என்கிறது ஆங்கில மருத்துவம்!


Periodontitis எனும் அழற்சியே பலருக்கு வாயில் துர்நாற்றத்தை உண்டாக்குகிறதாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு. மேலும், அஜீரணம், நாள்பட்ட குடல்புண், ஈரல், கணைய நோய்கள் கூடக் காரணமாகலாமாம். ஸ்டெம் செல் உதவியுடன் டைடானியப் பல் வளர்க்கும் வித்தையை நவீன உலகு ஆய்வு செய்கிறது என்று படிக்கும் போது வியப்பால் பிளக்கிறது நம் வாய்.

குளிர்பானம், சவ்வு மிட்டாய், தனி சர்க்கரை போன்றவை பற்களின் எனாமலைப் பாதிக்கும். ஜீரணக் கோளாறால் வயிற்றில் சுரக்கும் அமிலம் வாய்ப்பகுதிக்கு வந்து பல் எனாமலை அரிக்குமாம். அதிகபட்ச ஃப்ளூரைடு பல் அரிப்பு தொடங்கி சர்க்கரை வியாதி வரை உண்டாக்குமாம்!


கிருமிகள் நீங்க, உடற்சூடு தணிய, வாய்ப்புண்களைத் தடுக்க செக்கில் ஆட்டிய நல்லெண்ணைய் ஒரு கரண்டி எடுத்து காலை பல் துலக்கியபின் வாயிலிட்டு கொப்பளித்து நுரைத்தபின் உமிழ்தல் சிறந்த பலன் தருவதாய் உள்ளதாம்.


ஆலும் வேலும் பல்லுக்குறுதி என அந்தக்கால மனிதர்கள் பற்களை பராமரித்திருக்க, பலவித பற்பொடிகளும் பற்பசைகளும் சூழ்ந்திருக்க நாமெல்லாம் தான் நடுத்தர வயதுக்குள் பல் பிரச்சினைகளுக்காக வைத்தியம் தேடி அலைகிறோம்.


ஆலங்குச்சியால் பல் துலக்கினால் குளிர்ச்சியாம். இலந்தைக் குச்சியால் பல் விளக்க இனிய குரல்வளம் வருமாம். இத்தி மரக்குச்சி விருத்தி தருமாம். இலுப்பைக் குச்சி திடமான செவித்திறன் தருமாம். நாயுருவிச் செடியின் வேரால் பல்துலக்க புத்தி கூர்மை மற்றும் தைரியம் மிகுமாம். மருதமரக் குச்சியால் பல் துலக்க நரை குறைவதோடு ஆயுள் நீடிக்குமாம். உகா மரம் என்கிற குன்னி மரக்குச்சி தான் (மெஸ்வாக்) திருக்குர் ஆனில் சொல்லப் பட்ட பல்துலக்கியாம். கருப்பு பூலா கொடி வேரினால் பல் துலக்க ஆண்மை பெருகுமாம்.


போகட்டும். இவையெல்லாம் நம்மில் பலருக்கு அடையாளம் கூடத் தெரிய வாய்ப்பில்லை.

நினைவு தெரிந்த நாள் முதல் பல் வலிக்கு முதல் வைத்தியம் கல் உப்பு போட்ட வெந்நீரால் கொப்பளிப்பது. அடுத்து, லவங்கத் தைலம் பஞ்சில் தொட்டு வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்துவது. பிறகு சில கொய்யா இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு வெதுவெதுப்பாகக் கொப்பளிப்பது. கற்பூரம் வைப்பது. ஈறுகளில் வீக்கம் வலியென்றால், அருநெல்லிக்காயளவு புளியுடன் கல் உப்பு சிறிது சேர்த்துப் பிசைந்து வீக்கம் உள்ள இடத்தில் வைத்து வரும் உமிழ்நீரை துப்புவது. சமீபத்தில் மனோ அக்கா சொன்னது போல் ஒரு துண்டு உப்பு நாரத்தையை வலியுள்ள பக்கம் அடக்கிக் கொள்வது.


சமீபத்தில் வந்த பல்வலியால் கிடைத்த அனுபவங்களாக கேட்டதும் படித்ததும் ஆன பட்டியல் இதோ:


* மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.


* ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில் தடவி, இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும்.


* பல் வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று திண்ணவும்.


* சுத்தமான தேனை விரலால் ஈறுகளில் தினம் தடவ, வீக்கம் குறையும்.


* 2 வெங்காயம் நறுக்கி 2 ஸ்பூன் சர்க்கரையுடன் உண்க.


* மாந்தளிர் இலைச் சாறு ஒரு பங்குக்கு இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து வாய் கொப்பளிக்கவும்.


* பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி பல் தேய்க்க, பல் ஆட்டம், பல் சொத்தை, பல் கறை, பல்லில் இரத்தம் வடிதல் எல்லாமே தீரும்.


* ஆலமரப் பாலை பற்கள் மீது தடவினால் பல் ஆட்டம் நிற்கும்.


* ஆயில் புல்லிங் தினம் செய்ய பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா தொறற்¢லிருந்து விடுபடலாம்.


* கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட பல் பலப்படும்.


* நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பவும்.


*ஓமத்தை நீர்விட்டு அரைத்து களி போல் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப்போடவும்.


*ஒரு பல் பூண்டை நசுக்கி, வலி உள்ள இடத்தில் வைக்கலாம். இதுபோல் கிராம்பை நசுக்கியும் வைக்கலாம்.


* கோதுமைப்புல் சாறு அருந்திவர பல்வலி குறையும்.


* நெல்லிக்காய், பால், வெண்ணெய் போன்ற கால்ஷியம் மிகுந்த உணவு வகைகளை மிகுதியும் சேர்த்துக் கொள்ளவும்.


*இஞ்சிச்சாறை இலேசாக சூடாக்கி வாய் கொப்பளிக்கவும்.


* தான்றிக்காயைச் சுட்டு அதன் மேல் தோலைப் பொடித்து அதன் எடைக்குச் சமமாக சர்க்கரை கலந்து தினசரி காலை வெந்நீருடன் சாப்பிட பல் வலி, ஈறு நோய்கள் குணமாகும்.


* நெல்லிக்காய் கடுக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா பொடியைக் கொண்டு பல்விளக்கலாம்.


* பனங்கிழங்கை குப்பைமேனிச் சாற்றில் அரைத்து ந.எண்ணெயில் காய்ச்சி உபயோகிக்க பல்வலி குறையும்.


* கொள்ளுக்காய் வேரை கொதிக்க வைத்துக் கொப்பளிக்கவும்.


* சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து பல் துலக்கவும்.


*மகிழ மரப் பட்டையைப் பொடியாக்கி விளக்கலாம்.


*வாகை மரப் பட்டையை எரித்துப் பொடித்து பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல் வலி குணமாகும்.


* கருவேலம் பட்டைப் பொடியால் பல் துலக்கவும்.


* மாசிக்காயைத் தூளாக்கி, நீரில் கொதிக்க வைத்து கொப்பளிக்க ஈறு பலமடையும்.


* அசோக மரப் பட்டைப் பொடியுடன் உப்பு சேர்த்து விளக்கவும்.


* கடுகை பொடி செய்து வலிக்கும் இடத்தில் பற்று போடவும்.


* வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவவும்.


* ஆலம்பூ மொட்டினை வாயில் அடக்க பல்வலி போகும்.


* அருகம் புல்லை நன்கு மென்று வலி உள்ள பக்கம் அடக்கி வைக்கவும்.


* கடுகு எண்ணெயுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து ஈறில் தடவவும்.


* துத்தி இலை மற்றும் வேர்க் கசாயம் வாய் கொப்பளிக்கவும்.


* மாம்பூக்களை வாயிலிட்டு மெல்லவும்.

* கருஞ்சீரகத்தை வினிகரில் வேக வைத்துக் கொப்பளித்தால் பல்வலி தீரும்.


* கண்டங்கத்திரி விதையை நெருப்பில் சுட்டு வரும் புகையை பற்கள் மேல் படும்படி செய்ய வலி தீரும். பழத்தை உலர்த்திப் பொடித்து நெருப்பில் போட வரும் புகை, பல்வலி, பல் கிருமிகளைப் போக்கும்.


* பாகல் இலையை நன்றாக மென்று தின்றால் பல்வலி குணமாகும்.


* வலிக்கும் பக்கம் வாயினுள் சிறிது அச்சு வெல்லம் அடக்கிக் கொண்டு, ஒரு ஸ்பூன் மிளகுத் தூளை (18 மிளகு) கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில் வலிக்கும் பக்கம் கன்னப் பகுதியில் தேய்க்க வலி மறையும்.


* உப்பை நன்கு வறுத்து அதை சிறு துணியில் மூட்டை போல் கட்டி சூட்டுடன் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.


இவ்வளவு குறிப்புகளில் ஒன்று கூட பலனில்லை என்றால் இருக்கவே இருக்கிறார் பல் வைத்தியர்! பணக்கட்டுடன் கிளம்பலாம். ஆனால் இவ்வளவு குறிப்புகளும் தேய்க்கவோ உள்ளுக்கு சாப்பிடவோ சொல்ல, கீழ்க்கண்ட குறிப்பைப் படித்த போது நான் எப்படியாகியிருப்பேன் என நீங்கள் படிக்கும் போது உணரலாம்.


பல் வலித்தால் அன்று காலை கீழாநெல்லிச் செடியொன்றை வேருடன் பிடுங்கி தலைகீழாக (வேர் மேலும், இலைப்பகுதி கீழுமாக) நட்டு வைத்து மாலை அதை மீண்டும் நேராக (வேர் மண்ணிலும், இலைப்பகுதி மேலுமாக) நட பல்வலி குணமாகும். இது ‘மூலிகை ஜால ரத்தினம்' என்ற நூலில் காணப்படும் குறிப்பாம்...


 
 
 

Recent Posts

See All
வேதம் என்றால் என்ன part 2

வேதம் ஒரு புத்தகம் அல்ல !!! தமிழில் வேதத்தை “எழுதாக் கிளவி” என்பார்கள். அதாவது வேதத்தை எழுதி வைத்துப் படிக்க மாட்டார்கள். வேதத்தைப்...

 
 
 
வேள்வி என்றால் என்ன

ஆரியப் பார்ப்பனர்கள் வேதம் கற்றனர், வேள்விகள் செய்தனர்; வேள்விகளால் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்றெல்லாம் கதையளந்தனர்....

 
 
 
வேதம் என்றால் என்ன? 1

இந்தியப் பண்பாட்டுக்குப் பழமையான ஆதாரமான முதல்நூல் வேதம். உலகிலேயே மிகவும் பழமையான நூல் வேதம் என்பதைச் சரித்திர வல்லுனர்கள் அனைவரும்...

 
 
 

Comments


Our Company

Friends Facility Service is committed to doing business the right way. We are actively involved in corporate responsibility and sustainability initiatives.The secret to our success lies in how we tailor our solutions to client needs, how we manage risks, and how our engaged teams add the power of the human touch in everything we do. 

Head Office
Operating Hours

G.N.Chetty Road,

T.Nagar,

Chennai -600017.

 

Sunday to Saturday

24/7 all day

working day

Friends Facility Service, Be Friendly.

bottom of page