போதைப் பழக்கம்
- Deva
- Oct 16, 2019
- 2 min read
மது மற்றும் போதைப் பொருளை உள்ளடக்கிய உளத்தூண்டல் பொருட்களின் ஆபத்தான பயன்பாடே போதைப்பழக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.

உளத்தூண்டல் பொருட்களை பயன்படுத்துவதால் பயன்படுத்துவோருக்கு மட்டும் அல்லாமல் குடும்பத்தினருக்கும் சமுதாயத்திற்கும் குறிப்பிடத்தக்க ஆரோக்கியம் மற்றும் சமூக பிரச்சினைகள் உருவாகின்றன.
போதைப்பொருளில் மது,ஓபியம்,கொக்கைன்,ஆம்பேட்டாமைன்,மாயத்தோற்ற தூண்டிகள் மற்றும் கடைகளில் வாங்கும் பரிந்துரையற்ற மருந்துகளும் அடங்கும் (உட்கொள்ளும்போது அல்லது உடல்மண்டலத்துக்குள் செலுத்தும்போது மன செயல்பாடுகளை பாதிப்பவையே உளத்தூண்டல் மருந்துகள் ஆகும்) குடும்பங்கள், சமுதாயங்கள் மற்றும் நாடுகளின் சுகாதாரம், சமூகம் மற்றும் பொருளியல் அம்சங்களுக்கு உளத்தூண்டல் பொருட்கள் அதிக அளவிலான ஆபத்தை விளைவிக்கின்றன.
உலக அளவில் போதைப்பொருளால் ஏற்படும் கோளாறுகளை விட மதுவால் ஏற்படும் கோளாறுகள் அதிகம். மது மற்றும் போதைப்பொருள் ஆகிய இரண்டும் பெண்களை விட ஆண்களிடமே அதிக பயன்பாட்டில் உள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி (2002), உலக நோய்ப்பளுவில் 8.9% உளத்தூண்டல் பொருட்களால் ஏற்படுகின்றன.
இதில் புகையிலையால் 4.1%, மதுவால் 4% மற்றும் போதைப்பொருளால் 0.8%. உலக அளவில் மது அருந்துவோர் 200 கோடியும், புகைப்போர் 130 கோடியும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் 1.85 கோடிப் பேரும் உள்ளனர். இந்த மூன்று உளத்தூண்டல் பொருட்களும் வயதுக் குழுவினருக்கு ஏற்ப வெவ்வேறு நோய்ப்பளுவை உருவாக்குபவன.
போதைப் பொருளால் மரணம் விரைவில் நிகழ்கிறது. மதுவாலும் 60 வயதுக்குள் (65%) மரணம் ஏற்படலாம். 70% புகையிலையால் ஏற்படும் மரணம் 60 க்கு மேல் நிகழ்கிறது.
உலக சுகாதார நிறுவனப் பகுதியின் வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு வேறுபடுகிறது.
ஐரோப்பாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் புகையிலைப் பயன்பாடு அதிகம். ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மேற்கு பசிபிக்கில் மதுவே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
உலக மக்கள் தொகையில் 15-64 வயதுக்கு உட்பட்டோரில் 1.55-2.50 கோடி மக்கள் அதாவது 3.5%-6.7% பேர் பிற உளத்தூண்டல் மருந்துகளான கஞ்சா, ஆம்பேட்டாமைன், கொக்கைன், ஓப்பியம் மற்றும் பரிந்துரைக்கப்படாத மருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர் (உ.சு.நி. 2008). கஞ்சாதான் பெரும்பாலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொருள் (1.29-1.90 கோடி மக்கள்).
அடுத்து ஆம்பிடாமைன்,அதன் பின் கொக்கைன் மற்றும் ஓப்பியம்.
போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்துவோருக்கு (மருந்தாக அல்லாமல் உளத்தூண்டியாக) எச்.ஐ.வி., கல்லீரல் அழற்சி பி மற்றும் சி ஏற்படும் ஆபத்துள்ளது. 1.3 கோடி பேர் ஊசி மூலம் போதிப்பொருள் எடுப்போர். இவர்களில் 17 லட்சம் பேர் எச்.ஐ.வி.யோடு வாழ்கின்றனர்.
எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களில் 10% பேர் ஊசி மூலம் போதைப்பொருள் ஏற்றுவோர். ஊசி மூலம் போதைப்பொருள் ஏற்றுவோரில் 67% பேருக்கு கல்லீரல் அழற்சி சி உள்ளது.
இந்தியாவில் ஊசி மூலம் போதை ஏற்றுபவர்கள் ஓப்பியத்தைப் பொதுவாகப் பயன்படுத்துகின்றனர்.
இதில் ஹெராயின் மற்றும் மருந்துகளான பியூப்ரேநார்பைன், பெண்டாசாக்கின் மற்றும் டெக்ஸ்ட்ரோ-புராபாக்சிபீன் அடங்கும்.
வட கிழக்குப் பகுதியில் ஹெராயினையும் டெக்ஸ்ட்ரோ-புராபாக்சிபீனையும் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற மாநகர்களில் பியூப்ரேநார்பைன் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் சத்திஸ்கரில் ஊசி வழி பெண்டாசாக்கின் பயன்படுத்தப்படுகிறது.
பஞ்சாப், அரியானாவில் பியூப்ரேநார்பைன் ஊசிமூலம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஊசி மூலம் போதை ஏற்றுவோர்களில் 7.2 பேருக்கு எச்.ஐ.வி. இருப்பதாக எச்.ஐ.வி. காப்புக் கண்காணிப்பு அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும் சில மாநிலங்களில் இதை விட அதிகம் உள்ளது. பஞ்சாபில் 21%, தில்லியில் 18 % மற்றும் மணிப்பூரிலும் மிசோரத்திலும் ஏறக்குறைய 12 %. உளத்தூண்டல் மருந்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்தும்போது விபத்துகள் அதிகரிக்கின்றன.
தகுந்த பொது சுகாதார நடவடிக்கைகளைத் தனி நபரும், குடும்பங்களும் சமுதாயங்களும் பயன்படுத்துவதில் அதிக விழிப்புணர்வை கொண்டிருந்தால் புகையிலை, மது, மற்றும் சட்ட விரோதப் பொருட்களோடு தொடர்புடைய சுகாதாரம் மற்றும் சமூக பிரச்சினைகளைத் தடுக்கலாம். (உங்களின் எந்த பிரச்சனைக்கும் போதை பொருள் என்றுமே தீர்வாகாது. ஒருவேளை பழகி விடமுடியாமல் அவஸ்தைப்பட்டால் மருத்துவரை அணுகுங்கள் அவர் உங்களுக்கு தக்க சிகிச்சையும் மனநல மருத்துவத்திற்கும் பரிந்துரைப்பார்.) மனநலம் காப்போம் நன்றி தமிழ் வாழ்க... வாழ்க வளமுடன்...
Comments